thillaiyadi temple
தில்லையாளி என்கிற தில்லையாடி ஆலய தல வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாறுக்கு அருகில் உள்ள ஊர் தில்லையாளி என்கிற தில்லையாடி. இவ்வூர் தொன்றுதொட்டு சரித்திரத்தில் பெயர்பெற்று வருகின்றது. 1914-ல் காந்தியடிகள் தில்லையாடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த ஊரில் ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி ஆலயம் உள்ளது.சோழ மன்னன் இளங்கார முனிவர் என்ற அமைச்சரை திருக்கடவூருக்கு அனுப்பி அங்கு தங்கி ஆலயத்தை புதுப்பிக்கும்படி திருப்பணிக்கு உத்தரவிட்டு பொருட்களையும் வழங்கி வந்தான். மன்னனின் அனுமதி பெறாமல் திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லையாடி ஆலயத்தையும் ஒரே சமயம் திருப்பணி செய்துவிட்டான். இதை அறிந்த மன்னன் தன் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கால், கைகளை சேதம் செய்க என ஆணையிட்டான். ஏவலர்களும் அவ்வண்ணமே செய்தனர். சிவபெருமான் முன்தோன்றி அசரீரியாக அமைச்சர் செய்த சிவாலய பணியை ஏற்றோம் என்றது கேட்ட அரசன் திடுக்கிட்டான். துன் குற்றத்தினையுணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான். வெட்டுண்ட அமைச்சரின் கை கால்கள் ஒன்று கூடின. இளங்கார முனிவர் என்ற அமைச்சரை இவ்வாலயத்தில் தங்க வைத்து விட்டு அவருக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுத்துவிட்டு அரசன் சென்றுவிட்டான். சிவனருள் நிரம்பப் பெற்றவரான இளங்கார முனிவர் சிதம்பரம் பொற்சபையில் ஸ்ரீ நடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்திலும் காண எண்ணங்கொண்டார். சிற்சபா நாதனும் வேண்டுவார் வேண்டுவதே ஈவான்கண்டாய் என்ற திருவாக்கின்படி இளங்கரை முனிவர் விரும்பிய வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீ நடராஜர் நடனமாடினார். ஆன்று முதல் இத்தலம் தில்லையாடி என வழங்கலாயிற்று. அன்று முதல் இறைவனுக்கு ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த நாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று.இவ்வாலயம் திருக்கடையூர் ஆலயம் போன்ற அமைப்புள்ளதாயினும் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவில் , , மற்றும் ஊர் வாழ்மக்கள் முயற்சியாலும், தருமபுர ஆதீனகர்த்தர் நல்லாசியுடனும், காஞசி காமகோடி ஜகத்குரு ஜெயேந்திர மற்றும் விஜயேந்திர சுவாமிகளின் பரிபூரண ஸ்ரீமுகம் பெற்று 1995 செப்டம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளில் சுமார் 10 லட்ச ரூபாய் திருப்பணி வேலை முடிவுற்று அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி (சரணாகத ரட்சகர்) ஆலயம் புத்தம்புதுப் பொலிவுடன் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது...இவ்வாலயத்தில் சிறப்பு அம்சம் திருநள்ளாறுக்கு ஒப்பான சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. (இங்கு வேறு எந்த நவகிரகங்களுக்கும் சன்னதி கிடையாது.)ஆடி மாத விசேஷ நாட்களைத் தவிர ஆடிப்பூர விழாவில் பெரியநாயகி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி குழந்தை இல்லா பெண்களுக்கும் வளைகாப்பு வைபவம் செய்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் தாய்மையுற்ற பெண்கள் ஏராளமாவர்.இத்திருக்கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5டன் எடையுள்ள 2 பேர்களுக்கு மேல் நின்று இழுத்து அடிக்கக் கூடிய ராட்சத ஆலயமணியை வழங்கியுள்ளனர்..திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி சன்னதிக்கு வரும் மெய்யன்பர்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இத்திருக்கோவிலுக்கும் வந்து அன்னையின் அருட்கடாட்சத்தையும் ஈஸ்வரனின் அருளைப் பெறவும் கேட்டுக் கொள்கிறேன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home